கருப்பு பெட்டியை கொடுக்க மாட்டோம் என அடம்பிடிக்கும் ஈரான்; விடாது துரத்தும் கனடா

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச்சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச்சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்த சூழலில் இந்த விபத்து நடந்தது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வந்தது.

சேதி தெரியுமா! உலகிலேயே சட்டப்பூர்வமாக கஞ்சாவை வியாபாரமாக்கிய முதல் நாடு கனடா

ஆனால், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதேபோல், அமெரிக்காவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியது.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் பதற்றம் நிறைந்த ராணுவ பகுதிக்கு அருகே பறந்த பயணிகள் விமானத்தை, எதிரி நாட்டின் போர் விமானம் என நினைத்து ஏவுகணையை வீசி தாக்கிவிட்டதாக கூறியது. இது மனித தவறால் நடைபெற்ற விபத்து என்றும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஈரான் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, இந்த விமான விபத்து குறித்த உண்மை நிலை ஆராயப்பட வேண்டும் என்று கனடா அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதற்கான ஆய்வகங்கள் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால், சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டியை பிரான்சிடம் ஈரான் அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தினார்.

இந்நிலையில் கனடா வெளியுறவுதுறை அமைச்சர் பிரான்கோய்ஸ் பிலிப், ஈரான் வெளியுறவுதுறை அமைச்சர் முகமது சாரிஃப் உடனான தனது அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது இது குறித்து பேசியுள்ளார்.

“விமானத்தின் கறுப்புப் பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சுக்கு விரைவாக அனுப்ப வேண்டும் என்றும், அங்கு இது குறித்த ஆய்வுகள் வெளிப்படையான முறையில் செய்யப்படலாம்” என்று பிரான்கோய்ஸ் பிலிப் கூறியுள்ளார்.

கனடா Newfoundland மாகாணத்தில் பனிப்புயல் – மின்சாரமின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான வீடுகள் (வீடியோ)