கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம் – தமிழக பாஜகவின் வானதி சீனிவாசன் பங்கேற்பு

Canada News in Tamil
Canada News in Tamil

தமிழ் மொழி பேசுபவர்கள் மலேசியா, தென்னாபிரிக்கா, குவைத், கதார், பிரிட்டன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், மியான்மர், அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

அடிப்படையில் பல்வேறு நாடுகளையும், மொழிகளையும், கலாசாரத்தையும் கொண்டவர்கள் வசிக்கும் நாடாக விளங்கும் “கனடாவை சேர்ந்த தமிழர்கள், அந்நாட்டிற்கு செய்த பங்களிப்பையும், தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை போற்றும் வகையிலும், எதிர்கால கனேடிய சந்ததியினருக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதும் ‘தமிழ் பாரம்பரிய மாதமாக’ அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டு வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கனடாவில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம் – அசத்திய கிராமிய நடனக் குழு

இந்நிலையில், இந்தாண்டு கனடா தமிழ் சங்கத்தின் சார்பில் ‘தமிழியல் விழா 2020’ என்ற நிகழ்ச்சி டொரோண்டோ நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு இளையோர், பெற்றோர், ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, மேடை நிகழ்ச்சியாக தமிழ் மரபுக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றன.

பின்னர் தமிழியல் விழா நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றிவிட்டு சென்னை திரும்பிய அவர், கனடாவில் கனடா தேசிய தமிழ்பேரவை என்ற மிகப் பெரிய அமைப்பு செயல்படுவதாகவும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரதிநிதிகள் அனைவருமே தமிழில் வணக்கம் கூறிவிட்டே பேச தொடங்குவதாகவும் தெரிவித்தார்.

பின்னர், கனடாவில் வாழும் தமிழர் பிரதிநிதிகள் தன்னை சந்தித்த போது இலங்கையில், தமிழர்களின் நிலைமையை எடுத்துரைத்ததுடன், தமிழர்கள் தங்களின் பிரச்சினைக்காக தமிழகத்தில் உள்ள பிராந்திய கட்சிகளை நம்பியதாகவும் அந்த தலைவர்கள் தங்கள் அரசியலுக்காக தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி சீரழித்து விட்டதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்ததை வானதி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திலும் எங்களை இந்துக்கள் என்று சொல்ல அவர்கள் தயாராக இல்லை. வெறுமனே தமிழர்கள் என்ற அடையாளத்தை மட்டுமே வைத்ததால் எந்த சலுகையும் கிடைக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களுக்காக பேசுய போதும் தமிழக தலைவர்கள் பேசவில்லை.

கனடாவுக்கான இந்திய தூதராக அஜய் பிசாரியா நியமனம்

2009-ல் தி.மு.க. முதுகில் குத்தியது, காங்கிரசும் எங்கள் பக்கம் இல்லை. இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மோடி. அவரால் தான் ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களும் சம உரிமையுடன் வாழ தீர்வு காணமுடியும் என்று நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டதாக வானதி தெரிவித்தார்.

மேலும் தமிழர்களின் யாழ்ப்பாணம் பகுதிக்கு நேரில் சென்றவர் மோடி. இலங்கை-இந்தியா திறன் மேம்பாட்டு திட்டத்தில் கையெழுத்திட்டு தமிழர்கள் முன்னேற்றத்துக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார் என்று கூறிய கனடாவின் தமிழர் பிரதிநிதிகளிடம் கடல் கடந்து வாழும் உலக தமிழர்களும் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும், உங்களின் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது என்று உறுதி அளித்ததாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.