கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை – நடந்தது என்ன?

indian student shot dead in canada lock down

Canada Tamil News: கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ப்ரித்பால் சிங் என்பவர், மேற்படிப்பு படிப்பதற்காக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கனடா சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி மர்ம நபரால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கனடாவில் ஒரு மில்லியன் வேலை இழப்புகள் – 44 ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சி

ப்ரித்பால் கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலை இந்தியாவில் துணை ஆய்வாளராக பணிபுரியும் தந்தை ஷம்ஷர் சிங்குடன் பேசியிருக்கிறார். ஆனால், மறுநாள் அவர் சுடப்பட்டதாக கனடாவில் இருந்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

6ம் தேதி அவர் பேசிய போது, கனடாவில் நிலவும் கொரோனா வைரஸ் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஷம்ஷர் கூறுகையில், “எனது மகன் அப்பாவி. அவனுக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது. அங்கு அவனிடம் கார் இருந்தது. அதை அவனது நண்பர்கள் பலரும் வாங்கி உபயோகப்படுத்துவார்கள். அதை நோட்டமிட்டு, வேறு யாருக்கோ வைத்த குறிக்கு என் மகன் இலக்காகி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

லாக் டவுன் காரணமாக, விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும் சூழலில், தனது மகனின் உடலை எப்படியாவது இந்தியாவுக்கு மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, ப்ரித்பால் பெற்றோரின் இறுதி ஆசையாக இருக்கிறது.