டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் போராட்டம் வெடித்தது!

CERB
Canadian Prime Minister Justin Trudeau speaks during a Covid-19 pandemic briefing from Rideau Cottage in Ottawa on November 20, 2020. (Photo by Lars Hagberg / AFP)

இந்தியாவில் நடுவண் அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் ஒரு வாரத்தை கடந்து இன்னும் தொடர்கிறது.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவிலும் போராட்டம் வெடித்துள்ளது.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவர் பகுதியில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான சீக்கிய மக்கள் தங்கள் கார்கள் மற்றும் டிரக்குகளில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை கட்டியபடி சென்றனர்.

முன்னதாக விவசாயிகள் மீதான இந்திய பாதுகாப்புப் படையினரின் அணுகுமுறை குறித்து கனடா பிரதமர் ட்ரூடோ கவலை தெரிவித்ததோடு, தனது அரசு எப்போதும் அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.

“இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தை தான் கவனிக்காவிட்டால் அது தனது அலட்சியப்போக்காக இருக்கும்” என்று கனடாவில் வாழும் சுமார் ஐந்து லட்சம் சீக்கியர்களுக்கு குரு நானக் தேவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தான் வெளியிட்ட ஒரு ஆன்லைன் செய்தியில் ட்ரூடோ கூறியிருந்தார்.

“நிலைமை கவலை அளிக்கிறது. போராட்டம் நடத்திவரும் எல்லா விவசாயிகளின் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளேன்.

அமைதியான எதிர்ப்புக்கான உரிமை குறித்து கனடா எப்போதும் விழிப்புடன் இருப்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை நான் நம்புகிறேன். இது குறித்து இந்திய அதிகாரிகளுடன் நேரடியாக பேசியுள்ளேன்,”என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இதையும் படியுங்க: கனடாவில் 763 வைரங்கள் பதித்த தங்கப்பறவை திடீர் மாயம்! மலைக்க வைக்கும் அதன் மதிப்பு?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.