தடுப்பூசி போடாத ஊழியர்கள் பணிநீக்கம் – டொரன்டோ நகரம் அறிவிப்பு

Canada

Covid-19 தடுப்பூசி மருந்துகளின் மூலம் வைரஸ் தொற்றின் நான்காவது அலையை எதிர்கொள்வது சிறந்த வழிமுறை என்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசாங்கம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில covid-19 தடுப்பூசி மருந்துகளின் மீது உள்ள நம்பகமற்ற தன்மையால் கனடியர்கள் சிலர் covid-19 தடுப்பூசி மருந்துகளை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர்.

கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பல்வேறு துறைகளும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றிற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக இருந்தால்தான் அணுகலை பெற முடியும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் வேலைக்கு செல்ல இயலாமல் தனது வேலையை இழக்கக்கூடும் என்று டொரண்டோ நகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டாய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்துவதாக நகர அதிகாரிகள் கடந்த வாரம் சிவில் சேவைகளுக்கு தெரிவித்திருந்தனர். தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் தடுப்பூசியை ஏற்க மறுப்பவர்கள் தடுப்பூசிக்கான கட்டாயக்கல்வி அமர்வில் பங்கேற்க வேண்டும்.

கட்டாய தடுப்பூசி கொள்கையின்படி, எதிர்வரும் மாதம் செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் நகர ஊழியர்கள் அவர்களது தடுப்பூசி நிலையை வெளிப்படுத்த வேண்டும். செப்டம்பர் மாத இறுதிக்குள் நகரின் அனைத்து ஊழியர்களும் குறைந்தபட்ச முதல்கட்ட தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும்.மேலும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகரத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “தடுப்பூசி போடுவதற்கு இணங்காதவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் ” என்று தடுப்பூசி கொள்கை கூறியுள்ளது.