கனடாவில் பதட்டம் அடையும் பெற்றோர்கள் – பைசர் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான covid-19 தடுப்பூசி

credit-cp24 corona virus update

கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் விரைவாக விநியோகம் செய்யப்படுகின்றன. 82 சதவீதத்துக்கும் மேற்பட்ட தகுதியுள்ள கனடியர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

சமீபத்தில் பைசர் நிறுவனம் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்து வழங்குவதற்காக ஹெல்த் கனடாவிடம் அனுமதி கேட்டு கோரிக்கை வைத்திருந்தது. தற்பொழுது ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்திற்கு ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்த செய்தி பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில பெற்றோர்கள் பதட்டம் மற்றும் தயக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.

இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 51 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்களது குழந்தைகளுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கிடைத்த உடனே போடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். 23 சதவீத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து போட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பைசர் பயோ டெக் நிறுவனம் மட்டுமே குழந்தைகளுக்கான covid-19 தடுப்பூசி மருந்துக்கான அனுமதியை ஹெல்த் கனடாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ஹெல்த் கனடா பைசர் நிறுவனம் சமர்ப்பித்த தரவுகளை மதிப்பாய்வு செய்து வருகிறது.

“Covid-19 வைரஸ் தொற்று நோயினால் பெரும்பாலான குழந்தைகள் அவர்களது நண்பர்களுடனான உரையாடல், விளையாட்டு, பள்ளிகளின் சூழல் போன்றவற்றை இழந்துள்ளனர் “என்று டொரன்டோ பொது சுகாதாரத்தின் இணை சுகாதார அதிகாரி மருத்துவர் வினிதா துபே கூறினார்.