இனவெறிக்கு எதிரான பேரணியில் முழங்காலிட்டு ஆதரவை தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் : நெகிழ்ச்சியில் கனேடிய மக்கள்!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் காவலர் ஒருவரால், கழுத்தில் முட்டியால் அமுக்கப்பட்டு, துடி துடிக்க கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, இச்சம்பவம் உலக அளவில் வைரலானது.

கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் அரங்கேறிய இனவெறியை அடுத்து அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. கறுப்பின மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க வெள்ளையின மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது உலக அளவில் உற்றுநோக்கப்பட்டது.

அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து, கனடா என்று உலகில் பல்வேறு நாடுகளில் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக கனடாவிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஒட்டாவாவில் நடந்த போராட்டத்தில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். கறுப்பு நிற மாஸ்க் அணிந்து தனது பாதுகாவலர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ திடீரென முழங்காலிட்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

பிரதமரின் இந்த செயல்பாடு போராட்டகாரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு விதிகள் கனடாவில் அமலில் உள்ள நிலையில், இனவெறிக்கு எதிராக பிரதமரே வீதியில் இறங்கி போராட்டத்தில், கலந்து கொண்டாது கனேடிய மக்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றுள்ளது.