நைல் நதிக்கு மேல் 35 ஆயிரம் அடி உயரத்தில் பிறந்த குழந்தை – பறக்கும் விமானத்தில் பிரசவம் பார்த்த கனடிய மருத்துவர்

miracle baby

கத்தார் ஏர்வேஸ் விமானம் உகாண்டாவில் உள்ள Entebbe என்ற இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.   நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது  விமானத்தில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண் கதறினாள். விமானம் தரை இறங்குவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் மருத்துவர்கள் யாராவது உள்ளார்களா என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

அதே விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக பணியாற்றும் மருத்துவர் ஆயிஷா காதிப் இருக்கையிலிருந்து எழுந்து என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று பார்க்கச் சென்றுள்ளார்.

 

நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்திற்குள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக தொடங்கிவிட்டது என்பதை ஆயிஷா உணர்ந்தார். அவருக்கு உதவ விமானத்தில் இருந்த செவிலியர் ஒருவரும் ,குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் சென்றனர். விமானம் நைல் நதிக்கு மேல் நடுவானில்  35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது குழந்தை பிறந்தது.

மருத்துவர் ஆயிஷாவின் உதவியால் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் தனது குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுத்த அந்த பெண் நெகிழ்ச்சியில், நடுவானில் அற்புதமாக பிறந்த தனது குழந்தைக்கு Miracle Ayisha என்று பெயரை சூட்டினார்.

 

தன் பெயரை குழந்தைக்கு வைத்ததால் மகிழ்ச்சியடைந்த கனடிய மருத்துவர் ஆயிஷா தனது கழுத்தில் அணிந்திருந்த தனது பெயர் பொறிக்கப்பட்ட நெக்லஸை குழந்தைக்கு அணிவித்து நிகழ்ச்சியை வெளிப்படுத்தினார். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கரவொலி எழுப்பினர்.