கனடாவில் முற்றுகையிடப்பட்ட சீன தூதரகம் – சீனாவுக்கு எதிராக கனடாவில் வெடித்த போராட்டம்!

Vancouver
Vancouver Protest Against China Activity

கனடாவில் ( Vancouver ) சீன தூதரகத்திற்கு வெளியே திரண்ட மக்கள் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

சீனா நாட்டை சேர்ந்தது ஹவாய் நிறுவனம். இதன் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டு வந்த மெங் வான்ஷோவை, அமெரிக்க துண்டுதலின் பேரிலும், அமெரிக்கா பிறப்பித்த வாரண்டின் அடிப்படையிலும் 2018 ஆம் ஆண்டு கனேடிய  அரசு கைது செய்தது.

அதிலிருந்து சீனாவுக்கும் கனடாவுக்குமிடையே மோதல் போக்கு வெடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.

ஹவாய் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி மெங் கைது செய்யப்பட்ட பின்னர், தங்கள் நாட்டை உளவு பார்த்ததாக கூறி,

கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரியான மைக்கேல் கோவ்ரி மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் சீன  அரசால் கைது செய்யப்பட்டனர்.

சீனாவின் இந்த அராஜக போக்கை கண்டித்து,  சீன கம்யூனிஸ்ட் அரசின் எல்லை விரிவாக்க கொள்கைகளை கண்டித்தும், கனடாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், வான்கூவர் நகரில் அமைந்துள்ள சீன தூதரகம் அருகே தீவிர போராட்டம் நடைபெற்றது.

இந்தப்போராட்டத்தில் இந்திய வம்சாவளியினர், கனடா திபெத் குழு மற்றும் திபெத்திய சமூகம், கனடா மற்றும் இந்தியா அமைப்பின் நண்பர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, வான்கூவர் சொசைட்டி, வான்கூவர் உய்குர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, சீனாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் கனடாவில் பரவி வருவதன் காரணமாக, ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் அதிகபட்சமாக  50 நபர்கள் மட்டுமே, இந்த போராட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms