குஜராத்திகள் நான்கு பேர் அமெரிக்கா கனடா எல்லையில் உயிரிழப்பு – மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

justintrudeau

நான்கு பேர் கொண்ட ஒரு இந்தியக் குடும்பம் அமெரிக்கா – கனடா எல்லையில் கடுங்குளிரில் உறைந்து உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

எல்லையில் சட்டவிரோதமாக நடைபெறும் மனித கடத்தலை தடுப்பதற்கு அமெரிக்காவுடன் இணைந்து கனடிய அரசாங்கத்தால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் எல்லையை கடப்பது மிகுந்த ஆபத்துக்களை விளைவிக்கும். இதனால்தான் சட்டத்திற்கு புறம்பாக மக்கள் எல்லையை மீறுவதை தடுக்க லிபரல் அரசாங்கத்தால் முடிந்த அனைத்தையும் செய்துவருவதாக பிரதமர் ட்ரூடோ செய்தி மாநாட்டில் வெளியிட்டார்

சட்டவிரோதமான கடத்தலை தடுத்து நிறுத்தவும் அபாயங்களிலிருந்து மக்களை பாதுகாக்கவும் கனடா அமெரிக்க அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாக ட்ரூடோ கூறினார்.

சென்ற வியாழக்கிழமை மணிதொபா ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை அதிகாரிகள் ஒரு குழந்தை மற்றும் ஒரு பதின்ம வயதினர் உட்பட 4 சடலங்கள் அமெரிக்கா கனடா எல்லையில் எமர்சன் நகரத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர். குடியேறியவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழைய முயற்சிப்பதால் இந்த சம்பவம் அசாதாரணமானது.

எல்லையில் உயிரிழந்தவர்களின் குடும்பம் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. எல்லையில் நிலவிய கடுமையான குளிர்கால நிலையின் தாக்கத்தினால் உறைந்து உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்