மக்களே உஷார்! – போலி நாணயங்களை கண்டறிவதற்கு ஆலோசனைகளை வழங்கிய ஒன்ராறியோ அதிகாரிகள்

ஒன்டாரியோ மாகாண காவல்துறை ,போலியான நாணயங்கள் உபயோகத்தில் இருப்பதால் சில்லறை பரிமாற்றத்தின் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். நாணயத்தின் ஒரு பக்கம் விசித்திரமான தோற்றத்தில் ராணி எலிசபெத்தின் முகம் தெளிவற்ற நிலையில் இருப்பதாகவும் மற்றொரு பக்கம் கடல் குதிரையின் உருவம் போலியான நாணயங்களில் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும் ஒன்டாரியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி அன்று ஒருவர் ஹாக்ஸ்பரியில் உள்ள ரெஜன்ட் தெருவோர கடைக்கு சென்று இரண்டு போலியான நாணயங்களை பயன்படுத்தி பொருள்களை வாங்கியுள்ளார். இந்த நாணயங்கள் போலியானது என்பதை உறுதி செய்த உடன் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பார்வையில் அந்த நாணயங்கள் முற்றிலும் உண்மையான டூனி போல தோற்றம் அளிப்பதாகவும் காவல்துறை அதிகாரி கென்னத் கிரே புதன்கிழமை கூறினார். எனவே மக்கள் நாணயங்களை கவனமாக உற்று நோக்க வேண்டும் என்று கூறினார்.பொதுமக்கள் கவனத்திற்காக போலி நாணயங்களின் புகைப்படத்தை காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர்.

கனடாவில் போலி நாணயங்கள் தயாரிப்பது மிகவும் அரிதானது என்றாலும் ,$2 டாலருக்கு உள்ள புதிய பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே வெளியிடுவதாக ராயல் கனடியன் மின்ட்டின் செய்தி தொடர்பாளர் அலெக்ஸ் ரீவ்ஸ் கூறினார்.

போலியான டூனிகளில் $2க்கு பதிலாக $z என்று பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் போலி அல்லாத நாணயங்கள் நகர்த்தப்படும் போது மறைந்திருக்கும் இரட்டை மேப்பிள் இலைகள் தோன்றும் என்று மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.