கனடாவில் அமைச்சராகி சாதித்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்

Anita anand appointed as canada minister - கனடாவில் அமைச்சராகி சாதித்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்
Anita anand appointed as canada minister - கனடாவில் அமைச்சராகி சாதித்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் 37 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டப் பேராசிரியரான அனிதா ஆனந்த், மூன்று சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான நவ்தேப் பெய்ன்ஸ், பார்டிஷ் சாகர் மற்றும் ஹர்ஜித் சஜ்ஜன் ஆகியோருடன் அமைச்சரவையில் இணைகிறார்.

டொரொன்டோ ஸ்டார் செய்திப்படி, இராணுவ வன்பொருள் வாங்குவது உள்ளிட்ட பொது செலவினங்களை மேற்பார்வையிடும் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் இலாகா அனிதா ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அனிதா ஆனந்த் சட்ட கல்வியாளராக, வழக்கறிஞராக, ஆராய்ச்சியாளராக மற்றும் நான்கு குழந்தைகளின் தாயாக உள்ளார். கனடாவின் பிரதமரின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரத்தின்படி, 1985 ஆம் ஆண்டில் ஆண்டோரியாவுக்கு செல்வதற்கு முன்பு அவர் நோவா ஸ்கோட்டியாவில் பிறந்து வளர்ந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனிதாவின் தாய் சரோஜ் ராம் பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர். அனிதாவின் தந்தை SV ஆனந்த் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதா டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் கவர்னன்ஸ் நிறுவனத்தில் J. R. Kimber Chair ஆகவும் பணியாற்றியுள்ளார். மேலும், மாஸ்ஸி கல்லூரியின் ஆளும் குழுவில் உறுப்பினராகவும், மூலதன சந்தைகளில் கொள்கை மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகவும் இருந்தார். யேல் சட்டப் பள்ளி, குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கத்திய பல்கலைக்கழகத்திலும் சட்டம் கற்பித்து இருக்கிறார்.

குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வில் இளங்கலை (ஹானர்ஸ்), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நீதித்துறை இளங்கலை (ஹானர்ஸ்), டல்ஹெளசி பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.