2 மணி நேர தூரம்… 36 மணி நேரம் பயணித்த Air Canada விமானம் – வாழ்க்கையை வெறுத்த பயணிகள்

இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய ஏர் கனடா விமானம், 36 மணி நேரம் கழித்தும் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியாமல், மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கனடாவின் வேன்கோவர் நகரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 16ம் தேதி, கனடாவின் யுகோன் பிராந்தியத்தின் தலைநகர் ஒயிட் ஹார்ஸுக்கு, ஏர் கனடா 279 ரக விமானம் கிளம்பிச் சென்றது. ஒயிட் ஹார்ஸ் விமான நிலையத்தை நெருங்கிய போது, வானிலை சரியில்லாத காரணத்தினால், விமான நிலையத்தையே கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் விமானம் சுற்றி வந்தது. அதன்பிறகும், வானிலை தெளிவடையவில்லை.

இதனால், லேண்டிங் செய்வதற்காக அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் ஆங்கோரேஜ் பகுதிக்கு விமானம் திருப்பப்பட்டது. ஆங்கோரேஜ், ஒயிட் ஹார்ஸ் விமான நிலையத்தில் இருந்து 490 மைல்கல் தொலைவில் உள்ளது.

கனடாவிற்குள் பயணம் செய்வதற்காக தான் பயணிகள் விமானத்தில் ஏறினர். இதனால், பெரும்பாலானோரிடம் பாஸ்போர்ட் வேறு இல்லை.

சிபிசி அறிக்கைப்படி, அன்றைய இரவு பயணிகள் அனைவரும் அலாஸ்காவில் தங்க வைக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும், மறுநாள் காலை விமானம் மூலம் ஒயிட் ஹார்ஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு, திட்டமிட்டப்படி அந்த விமானம் ஒயிட் ஹார்ஸ் நோக்கிச் சென்றால், மீண்டும் வானிலை மோசமாக இருக்க, வேறு வழியின்றி முதலில் புறப்பட்ட இடமான வேன்கோவர் விமான நிலையத்திற்கே விமானம் திரும்பிச் சென்றது.

இந்த ஒட்டுமொத்த பயணத்தில், திங்கட்கிழமை கிளம்பிய பயணிகள், 36 மணி நேரத்திற்கு பிறகு புதன்கிழமை ஒயிட் ஹார்ஸ் சென்று சேர்ந்தனர். கிட்டத்தட்ட 2700 மைல் தூரம் அவர்கள் பயணம் செய்திருக்கின்றனர்.