கனடாவில் ஒரு மில்லியனை கடந்த கொரோனா தொற்று! மாகாணம் தழுவிய அவசரகால தடுப்பு அமலுக்கு வந்த பகுதி!

Ontario
Ontario Lockdown

கனடாவில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த இரண்டு நாட்களில் கண்டறியப்பட்ட 2 ஆயிரத்து 90 தொற்றாளர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டதையடுத்து, கனடாவில் இதுவரை இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

மார்ச் 13ஆம் நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 9 இலட்சத்தைக் கடந்திருந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களில் பத்து இலட்சத்தை கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் கனடாவில் மூன்று தொடக்கம் நான்கு வாரங்களில் ஒரு இலட்சம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ள “மாகாணம் தழுவிய அவசரகால தடுப்பு” என்ற பெயரிலான முடக்க நிலை  நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த முடக்க நிலை குறைந்தபட்சம், நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உணவகங்கள் அனைத்திலும் உணவருந்தலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்படும்.

அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் 50 சதவீத கொள்ளளவுடனும், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள், 25 சத வீத கொள்ளளவுடனும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.