ரஷ்யாவிற்கு விரித்த வலையில் கனடா சிக்கி கொள்ளுமா? – பொருளாதார தடைகளினால் யாருக்கு பாதிப்பு?

chrystia freeland

கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா இரக்கமற்ற தாக்குதலை நடத்தி வருகிறது.ரஷ்யாவின் கொடூரமான படையெடுப்பிற்கு கனடா உட்பட அனைத்து மேற்கத்திய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு நிதியளித்து வரும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை செயல்படாமல் தடுப்பதற்கு ரஷ்யா மீது கனடா பொருளாதார தடைகளை அறிவித்திருந்தது.

உக்ரைன் மீதான போரை தலைமை ஏற்று நடத்தும் ரஷ்ய ஜனாதிபதியை கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் ரஷ்யாவிற்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அந்த நகர்வுகளில் சில பொருளாதாரக் கொள்கைகள் கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்று நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்தார்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பல்வேறு தடைகளை அறிவித்துள்ளன. ரஷ்யாவை தண்டிக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, உக்ரேனிய நிதி அமைச்சர் மற்றும் G7 நாடுகளின் நிதியமைச்சர்களை சந்தித்த பின்னர் கனடிய நிதியமைச்சர் கிறிஸ்டியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கொடூர செயல்களுக்கு பதிலடியாக பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டணங்கள் போன்றவை சிறந்த நடவடிக்கைகளாகும். பொருளாதார தடைகளினால் எதிர் தரப்பினரின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி ,நமது பக்கம் குறைவான சேதத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதுவரை கனடிய பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத பொருளாதாரத் தடைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.