ட்ரெண்டாகி வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – #Justinflation ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் எதிர்ப்பாளர்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கனடியத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று கனடாவின் பிரதமராக மூன்றாவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பதவி ஏற்றார்.

பிரதமர் ட்ரூடோ பதவியேற்று நான்கு மாதங்களுக்கு பிறகு அவரது பெருமை மற்றும் புகழ் படிப்படியாக வீழ்ச்சி அடைவதாக கூறப்படுகின்றன. கனடிய பொருளாதாரம் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சீர்குலைந்தது.

கனடாவின் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவு மிக உயர்ந்த புள்ளியை எட்டியுள்ளதாக அரசாங்கத்தின் தரவு நிறுவனமான புள்ளியியல் கனடா தெரிவித்தது. டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு 4.8% ஆக இருந்ததாகவும் கூறியது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நுகர்வோர் விலைக் குறியீடு உயர்ந்த புள்ளியை எட்டியதால் பணவீக்கத்தின் கவலை அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் பணவீக்கத்தின் தாக்கத்தை வெளிப்படுத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் எதிர்ப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் #Justinflation என்ற ஹேஸ்டேக்களை பயன்படுத்தி இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதன் விளைவாக லிபரல் கட்சியினர் மக்களிடையே உள்ள செல்வாக்கை இழந்துள்ளனர்.கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினை விட தாராள வாதிகளின் அரசாங்கம் பின்தங்கி உள்ளதாக நானோஸ் ரிசர்ச் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எதிர்வரும் வாரம் பேங்க் ஆஃப் கனடா வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நாட்டின் பணவீக்கத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.