கனடா முழுவதும் நகரங்களில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – தீர்வு உள்ளதா?

protest

கனடாவில் எல்லையைத் தாண்டும் லாரி ஓட்டுநர்களுக்கு கட்டாய covid-19 பரிசோதனையை லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார். Covid-19 கட்டாய பரிசோதனையை எதிர்த்து தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுனர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்றும் வரும் போராட்டத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 50 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி வளைத்துள்ள போராட்டக்காரர்களால் தலைநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வெறுக்கத்தக்க 11 குற்றவியல் நடவடிக்கைகள் போராட்டத்தில் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Freedom convoy என்று அழைக்கப்படும் போராட்டம் கடந்த வாரம் முதல் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்று வருகிறது. உலகின் பிரபலமான பணக்காரரான எலான் மஸ்க் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து பிரதமரின் தடுப்பூசி ஆணையை எதிர்த்து போராட்டம் வலுத்து வருகிறது.

போராட்டக்காரர்களில் சிலர் வீட்டிற்குச் சென்றாலும்,நேற்று மீண்டும் போராட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.போராட்டத்தோடு தொடர்புடைய 500 கனரக வாகனங்கள் தலைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ஒன்ராறியோவின் சட்டமன்றத்திற்கு அருகே போராட்டக்காரர்களால்ல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் புகை குண்டை பற்ற வைத்ததாக போலீசார் கைது செய்துள்ளனர் .