திடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

Weather
Weather Alert Toronto

சுற்றுச்சூழல் கனடா கிரேட்டர் டொரன்டோ பகுதியில் கன மழையானது செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு ஒண்டாரியோ மற்றும் GTA பகுதிகளில் கனமழை எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

ஈரப்பதம் நிறைந்த குறைந்த அழுத்தம் காரணமாக அமெரிக்க மத்திய மேற்கு பகுதியிலிருந்து மழையானது வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 75 மிமீ வரை பலத்த மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் 50 மில்லி மீட்டர் முதல் 60 மில்லி மீட்டர் வரையிலான மழை பொழியலாம் என்று சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது .

நகர் பகுதிகளில் சாலைகளில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் ஆங்காங்கே தண்ணீர் தேங்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய இடியுடன் கூடிய கனமழை புதன்கிழமை இரவு வரை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

வாகனங்களில் விளக்குகள் ஒளிரச் செய்து வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரங்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மழைநீர் தாழ்வான பகுதிகளை நோக்கி செல்கிறது. எனவே, தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை சுற்றி வசிக்கும் குடியிருப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டொரன்டோ பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் நகரின் வெப்ப நிலை ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளத்தைத் தடுக்கும் சாத்தியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு குடியிருப்பாளர்களை டொரண்டோ நகரம் வலியுறுத்தியுள்ளது.