உருவெடுத்தது Omicron வைரஸ் – பயணத் தடையை அறிவித்துள்ளது கனடிய அரசாங்கம்

Covid-19 வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக 7 தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கனடியர்கள் அல்லாதவர்களை கனடாவிற்குள் நுழைவதற்கு கனேடிய அரசாங்கம் தடை செய்துள்ளது.

ஓமிக்ரான் மாறுபாடானது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் மாறுபாடு பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை கனடாவின் இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஓமிக்ரான் தொடர்பான வழக்குகள் கனடாவில் இதுவரை கண்டறியப்படவில்லை.

கனடிய அரசாங்கம் அறிவித்துள்ள பயண தடையால் 7 தென் ஆபிரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிம்பாப்வே, எஸ்வதினி,லெசோத்தோ, மொசாம்பிக், நமீபியா, போட்ஸ்வானா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கனடிய அரசாங்கம் பயண தடையை அறிவித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்களாக இந்த நாடுகளுக்குள் பயணித்த வெளிநாட்டவர்களுக்கு கனடாவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கனடிய நிரந்தர குடியிருப்பாளர்கள், கனடியர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கடுமையான பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

கனடாவிற்கு வந்தடைந்தவுடன் தடுப்பூசி நிலையை பொருட்படுத்தாமல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கனடாவிற்கு வந்தடைந்து எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன்பு மூலக்கூறு பரிசோதனை செய்திருக்க வேண்டுமென்று கனடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.