புத்தாண்டு ஆரம்பமே அதிரடியான பனிப்பொழிவு – டொரண்டோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணம் ஆலோசனை வழங்கப்பட்டது

கனடாவின் டொரன்டோ நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு மிகுந்த பனிப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான காலநிலையோடு தொடங்குகிறது. டொரன்டோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் மிகுதியான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் கனடா பயண வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கடும் குளிர் மற்றும் பனி பொழிவு காரணமாக விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் வானிலை அறிவிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றன.

கனடாவின் கூட்டாட்சி வானிலை நிறுவனம் ” பனிப்பொழிவானது 1-லிருந்து 2 சென்டி மீட்டர் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் சாத்தியமுள்ளது மேலும் ஞாயிற்றுக்கிழமை வரை பனிப்பொழிவு தொடரும் “என்று தெரிவித்துள்ளது.

புத்தாண்டு இரவில் ஏரிக்கு தெற்கே சென்ற குறைந்த அழுத்த சூழல் காரணமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும் எனவே இப்பகுதியில் 5 முதல் 10 சென்டிமீட்டர் வரையிலான பனிப் பொழிவை காணலாம் என்று வானிலை அமைப்பு கூறியது. மேலும் பனிப்பொழிவு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் பனிப்பொழிவு காரணமாக சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரங்களில் அபாயகரமான நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. வருடத்தின் தொடக்கத்தில் அதிகமான பனி பொழிவுடன் ஆரம்பித்தாலும் திங்கட்கிழமை முதல் சூரியன் மேகங்கள் இடையே தோற்றம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.