மிசிசாகா மசூதியில் தொழுகையின்போது வழிபாட்டாளர்களை தாக்கிய நபர் – கண்டனம் தெரிவித்த கனடிய பிரதமர்

mosque congregatants attacked by a person in missisauga

கனடாவின் மிசிசாகாவில் உள்ள மசூதியில் சனிக்கிழமை அதிகாலை வழக்கம் போல பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.வழிபாட்டாளர்கள் அமைதியாக கடவுளைத் தொழுது கொண்டிருந்தபோது 24 வயதுடைய நபர் அவர்களை கடுமையாக தாக்கியதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

மசூதியில் திடீரென தாக்குதல் நடைபெற்றதும் மசூதி உறுப்பினர்கள் உடனடியாக அவசர எண் 911-க்கு அழைப்பு விடுத்தனர். McAdam சாலை மற்றும் Matheson Boulevard பகுதியில் அமைந்துள்ள Dar Al-Tawheed இஸ்லாமிய மையத்தில் நடைபெற்ற தாக்குதல் காரணமாக காவல் துறைக்கு அழைப்பு விடுத்த மசூதி உறுப்பினர்களுக்கு காவல்துறையினர் பதிலளித்தனர்.

மசூதிக்குள் நுழைந்த நபர் வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது சபையினரை நோக்கி Bear Spray-ஐ வீசியுள்ளார். புகார் அளிக்கப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் வரும்வரை தாக்குதல் நடத்திய நபரை கூட்டமாக சேர்ந்து அடக்கி வைத்தனர்.

அந்த நபர் ஏற்படுத்திய தாக்குதலில் சில பள்ளிவாசல் உறுப்பினர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குற்றவாளியை உடனடியாக கைது செய்தனர் .இச்சம்பவம் வெறுப்புணர்வில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் Brampton நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமின் விசாரணை நிலுவையில் உள்ளது. மசூதியில் நடைபெற்ற தாக்குதல் நம்ப முடியாத அளவிற்கு கவலை அளிக்கிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஒண்டாரியோ முதல்வர் Doug Ford மசூதியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்