இந்தியாவின் covaxin தடுப்பூசிக்கு அனுமதி – பயணிகளுக்கு கனடிய அரசாங்கம் ஆலோசனை

covaxin india who canada

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்தினை முழுமையாக பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு கனடாவிற்குள் நுழைய கனடிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு முன்புவரை கனடா இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தது.

உலக சுகாதார அமைப்பு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகளுக்கு கனடிய அரசாங்கம் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று இந்தியா பலமுறை கேள்வி எழுப்பியுள்ளது. தற்பொழுது நவம்பர் 30-ஆம் தேதி முதல் covaxin தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவசரகால பயன்பாட்டிற்காக நவம்பர் 3ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனத்தின் covaxin தடுப்பூசி மருந்து உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது. Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக 77.8% செயல்திறனையும், டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராக 65% செயல்திறனையும் covaxin கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், covid-19 பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. பயணிகளுடன் வரும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இது பொருந்தும் என்று கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளில் ஒன்றினை குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்பு பெற்றிருக்க வேண்டும். இரண்டு கட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென்று பயணக் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளது.