கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் ஆலோசனை – எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை

protest

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பயணிப்பதற்கு லிபரல் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள covid-19 தடுப்பூசி ஆணைகள் , covid-19 கட்டுப்பாடுகள் மற்றும் பூட்டுதல்களை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் லாரி ஓட்டுனர்களால் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

தலை நகரில் நடைபெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளது. போராட்டம் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று செவ்வாயன்று தெரிவித்தது .

கனடாவின் தலைநகர் ஒட்டாவா உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தற்போது சாலை மறியல், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால், வேலைநிறுத்தம் மற்றும் உணவு பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டு பெரும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

தற்பொழுது ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்கள் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் பிற முக்கிய நகரங்களில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் ஊரடங்கு அல்லது பிற கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம் என்றும் கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய உயர் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் கனடாவிற்கு பயணிக்க விரும்பும் இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. போராட்டத்தின் சூழ்நிலை பற்றி தெரிந்துகொள்ள உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது