இந்திய மாணவர்களுக்கு கனடாவில் செலவு அதிகமா? – ஒவ்வொரு மாதமும் 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

indian in canada

இந்தியாவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் கனடாவை நோக்கி பயணிக்கின்றனர். பெரும்பாலான இந்திய மாணவர்கள் பல்கலைக்கழக படிப்புகளுக்கு கனடாவையே தேர்ந்தெடுக்கின்றனர் .இந்த வருடம் கனடா இந்தியாவிலிருந்து அதிக மாணவர் சேர்க்கையை இலக்கு வைத்துள்ளது.

இந்தியாவிலிருந்து 76,149 மாணவர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டில் படிப்பதற்கு கனடிய அரசாங்கம் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. தற்போது இரண்டு மடங்காக 1,56,171 கல்வி வாய்ப்புகளை கனடா வழங்கியுள்ளதாக குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா IRCC தரவுகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு Covid 19 வைரஸ் தொற்று காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் கல்வி வாய்ப்புகள் வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்த ஆண்டு இருமடங்காக கல்வி வாய்ப்புகளை கனடா அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேரும் இந்திய மாணவர்களின் உயர்ந்த இலக்குகளுக்கு வழிவகுக்கும்.

பஞ்சாபிலிருந்து அதிக அளவு மாணவர்கள் கனடாவின் கல்வி வாய்ப்புகளை பெறுகின்றனர். இந்தியாவிலிருந்து கனவுகளுடன் கனடாவிற்கு வரும் மாணவர்கள் பல்வேறு மன நல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கனடாவில் உள்நாட்டு மாணவர்களுக்கு $7000 கனடிய டாலர்கள் கல்வி நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டால் இந்திய மாணவர்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகின்றன.

தனது குழந்தைகளின் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் குடும்பங்கள் பெரும் கடனை சுமக்கின்றன. தங்குமிடம் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய செலவுகள் சுமையை அதிகரிக்கின்றன.

கனடாவில் ஒவ்வொரு மாதமும் 5 இந்திய மாணவர்களின் சடலங்கள் இறுதி காரியங்களுக்காக பதிவாகி வருவதாக கிரேட்டர் டொரண்டோவில் உள்ள இறுதி இல்லம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் முதலீடுகளைத் திரும்பப் பெறுவதற்கு முயற்சி செய்தும் பயனில்லாமல் இறுதியாக தற்கொலை மற்றும் போதை பழக்கத்திற்கு மாணவர்கள் திரும்புகிறார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ரவி கூறுகிறார்.