கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தன்னுடன் ஒரு பொம்மையை கொண்டு வந்துள்ளார்.
நோயாளி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் மருத்துவமனை ஊழியர் ஒருவர் நோயாளியின் உடைமைகளை சோதித்து பார்த்தார். அப்போது நோயாளி கொண்டுவந்த உடைமைகளில் பொம்மை ஒன்று இருந்ததைக் கண்டார்.
ஊழியர் அந்த பொம்மையை சுழற்றி பார்த்தபோது பொம்மையின் வயிற்றுப்பகுதியில் சிறிய கீறல் ஒன்று இருப்பதை கவனித்தார். அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பொம்மையின் வயிற்றுப் பகுதியிலிருந்து ஏராளமான மாத்திரைகள் கிடைத்தன. அவை Ivermectin மாத்திரைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
கால்நடைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுவதற்கு இந்த வகை மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன .ஆனால் அமெரிக்காவில் covid-19 சிகிச்சைக்கு சிலர் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. Ivermectin மாத்திரைகள் Covid-19 தொற்று சிகிச்சையில் பலன் அளிப்பதாக உறுதி செய்யப்படவில்லை.
ஒன்டாரியோவின் Queen’s பல்கலைக்கழக தொற்று நோயியல் நிபுணரான மருத்துவர் ஜெரால்டு ,முதல்கட்ட ஆய்வுகளில் இந்த மாத்திரைகள் covid-19 சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அந்த மாத்திரைகளை பயன்படுத்தினால் மோசமான பக்க விளைவுகள் உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளார். விஷம் உண்பதற்கு ஈடான பாதிப்புகளை இந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.