கனடிய தூதரக அதிகாரிக்கு மூக்கிலிருந்து ரத்தம் – ரஷ்யா போன்ற நாடுகள் பின்னணியில் இருப்பதாக கருத்து

Canada
Toronto, Peel Region

கியூபாவில் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்த கனடிய தூதரக அலுவலர் காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது தனது மூக்கிலிருந்து ரத்தம் வருவதை உணர்ந்துள்ளார். தலை சுற்றலும் ஏற்பட்டதால் சிரமத்துடன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்.அங்கும் தலைசுற்றல் தொடர்ச்சியாக இருந்ததால் அலுவலக பணிகளை அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. எனவே மீண்டும் தனது இருப்பிடத்திற்கு திரும்பி விட்டார்.

கியூபா நாட்டின் ஹவானா பகுதிக்கு தூதரக பணிகளுக்காக வந்த மற்றொரு கனடிய தூதரக அலுவலருக்கு தினமும் இரவு நேரங்களில் காதுகளுக்குள் அதிர்வது போல் உணர்வு ஏற்பட்டுள்ளது. ஹவானாவுக்கு வந்து சில வாரங்களிலேயே அவரது பார்வை திறன் மோசமடைய தொடங்கியுள்ளது.

இது போன்ற பிரச்சனைகளை சுமார் 20 கனடிய தூதரக அலுவலர்கள் சந்தித்துள்ளனர். இந்தப் பிரச்சனைக்கு ஹவான அறிகுறி என்று பெயர். இந்த வினோத பிரச்சனை முதன்முதலில் 2016ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானாவில் இருந்த அமெரிக்க தூதரக அலுவலர்களுக்கு ஏற்பட்டது. எனவே, ஹவானா அறிகுறி என்று அழைக்கப்படுகிறது.

20 கனடிய தூதரக அதிகாரிகள் இந்த வினோத பிரச்சனை குறித்து புகார் அளித்தும் கனடிய அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை கைவிட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கனடிய அரசாங்கம் இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரச்சனையின் பின்னணியில் ரஷ்யா போன்ற நாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மைக்ரோவேவ் அலைகளை பரப்புவதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாகவும் குறிப்பாக தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.