ஹெலிகாப்டர் மூலம் கால்நடைகளுக்கு உணவு வழங்கப்படும் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெள்ள அபாயத்தால் வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் நிலச்சரிவுகள் போன்ற இடர்பாடுகளில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். பெரும் வெள்ளத்தால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை குறித்த தகவல்களை அரசாங்கம் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைகளில் நிலச்சரிவு காரணமாக வாகன ஓட்டிகளும், பயணிகளும் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். சாலைகளில் தடைகளை அகற்றிய பின்னர் நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

200க்கும் மேற்பட்ட துருப்புக்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு அனுப்புவதற்கான உத்தரவுக்காக எட்மன்டனில் தயார் நிலையில் காத்திருக்கின்றனர். வெள்ள நீரில் மூழ்கியவர்களை மீட்பதற்கு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக கனடிய ஆயுதப் படை வீரர்கள் 120 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இருந்து நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள அபாயத்தினால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வெள்ளத்தினால் தனது இருப்பிடங்களை விட்டு மக்கள் வெளியேறியதால் பண்ணைகளில் கால்நடைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றை வழங்க இயலவில்லை. ஹெலிகாப்டர் மூலம் கால்நடை விலங்குகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.