கனடாவில் தமிழ் பாரம்பரிய மாத கொண்டாட்டம் – கனடிய தமிழ் பெண்ணாக வாழ்த்துக்களை தெரிவித்த அனிதா ஆனந்த்

picture credit anita anand tamil heritage month

“தமிழர் திருநாளாம் தைத்திருநாள் ” இவ்வாறு தமிழனின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தைத்திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் அதிகமாக குடியேறி வரும் நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.

கனடிய அரசாங்கம் கனடாவில் குடியேறும் தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி ஆனது தமிழர்களின் பாரம்பரிய மாதமாக கனடாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் கனடிய அரசாங்கம் தமிழை பயன்பாட்டு மொழியாக அங்கீகரித்துள்ளது.

கனடாவின் அரசியல், சமூகம், பண்பாடு மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றிற்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுகிறது.

தமிழ் பெண்ணாக பிறந்து கனடாவின் தேசிய பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகிக்கும் அனிதா ஆனந்த் கனடாவில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகிலேயே தமிழர்கள் பெரும்பான்மையானோர் புலம்பெயர்ந்து வாழும் ஒரே நாடு கனடா ஆகும். தமிழ் கனடியர்களின் இணையற்ற பங்களிப்பிற்காக நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இந்த பாரம்பரிய மாதத்தில் தெரிவித்துக்கொள்கிறோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.”ஒரு தமிழ் கனடிய பெண்ணாக அனைவருக்கும் எனது தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.