சீனாவை எதிர்த்து புறக்கணிப்பு – அமெரிக்கா, கனடா நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைப்பு

CERB
Canadian Prime Minister Justin Trudeau speaks during a Covid-19 pandemic briefing from Rideau Cottage in Ottawa on November 20, 2020. (Photo by Lars Hagberg / AFP)

மனித உரிமைகள் கவலைகள் தொடர்பாக சீனாவின் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன. நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து கனடாவும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை பொருத்துக் கொள்ள முடியாது. சீனாவின் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். பிப்ரவரி மாதத்தில் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் உறுதிப்படுத்தியது.

நாடுகள் ஒருங்கிணைந்து புறக்கணிப்பை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் பதிலடி கொடுப்பதாக சீனா தெரிவித்துள்ளது. புறக்கணிப்பு குறித்த விவரங்களை கனடா தனது நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பிரதமர் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கனடியர்களை சீன அரசாங்கம் சிறை பிடித்ததில் இருந்து சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசம் அடைந்துள்ளன.” மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள முடியாது .சீனாவிற்கு ஒரு வலுவான எதிர்ப்பை தெரிவிப்பது முக்கியம், மேலும் பல நாடுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் “என்று கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறினார்.