கனடிய ஆய்வு ஒன்றில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோரின் ஊதியம் சமீபகாலத்தில் உயர்ந்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் 32 ஆயிரம் டாலர்கள் ஊதியம் பெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வருட கால புலம்பெயர்ந்தவர்களின் ஊதியத்தை கணக்குப் பார்த்தால் இதுதான் மிக உயர்ந்த ஊதியம் ஆகும். 1981 முதல் தற்போதைய ஆண்டு வரை புலம்பெயர்ந்தவர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது மிகவும் உயர்ந்த ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கனடாவிற்கு புலம்பெயர்ந்தோரின் ஊதியம் தொடர்பாக ,கனடாவின் புள்ளிவிவரங்கள் அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. புலம்பெயர்வதற்கு முன்னதாக கனடிய பணி அனுபவம் பெற்றிருந்தால் ஊதிய உயர்வு கிடைக்கும்.
கனடாவில் கல்வி அனுபவம் மட்டும், பணி அனுபவம் மட்டும் மற்றும் கல்வி, பணி அனுபவம் என்று மூன்று வகையாக அனுபவங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி மற்றும் பணி அனுபவம் ஆகிய இரண்டும் பெற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு பணியில் சேர்ந்து ஓராண்டில் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கனடாவிலேயே பிறந்தவர்கள் 38800 டாலர்கள் ஊதியம் பெறும் போது, கனடாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் 2018ல் பணியில் சேர்ந்து 2019 ஆம் ஆண்டில் 44600 டாலர்கள் ஊதியம் பெறுகிறார்கள்.பணி அனுபவம் மட்டும் பெற்ற புலம்பெயர்ந்தவர்கள் 39300 டாலர்கள் ஊதியம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்