சீனாவை முந்திய இந்தியா – கனடாவில் குடியேறுபவர்களை வரவேற்கிறது கனடிய அரசாங்கம்

கனடாவில் covid-19 தொற்றுக்கான சுகாதார கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளுக்கிடையேயான விமான சேவைகளிலும் PCR மூலக்கூறு பரிசோதனை கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கனடாவின் அகதிகள் மற்றும் குடிவரவுத்துறை அமைச்சர் Sean Fraser கனடாவில் குடியேற்றுவதற்கான இலக்குகளை அறிவித்துள்ளார்.

2022 -2024 வரையிலான குடியேற்றத்திற்கான திட்டம் கனடாவின் மக்கள்தொகையில் 1% என்ற எண்ணிக்கையில் கனடாவில் குடியேறுபவர்களை வரவேற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கனடாவில் குடியேறுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கனடாவில் குடியேறுபவர்களின் இலக்கை அதிகரித்துள்ளதால் பெரும்பான்மையான இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. கனடாவில் குடியேறுவதற்கான மிகப்பெரிய ஆதார நாடாக இந்தியா உள்ளது. கனடாவில் புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கையில் சுமார் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்க குடியேற்றம் முக்கியமானது என்று அமைச்சர் Fraser தெரிவித்தார். மேலும் ” இன்றைய கனடாவை வடிவமைக்க குடியேற்றம் தேவைப்படுகிறது. வேளாண்மை முதல் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறை வரை கனடா குடியேறியவர்களை நம்பியுள்ளது .” என்று அவர் கூறினார்.

குடியேற்றத்தில் 2017 ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தியது. தற்பொழுது வரை கனடாவில் குடியேறியவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அந்த ஆண்டு முதல் கனடாவில் குடியேறுபவர்களின் வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.