புகைப் பழக்கத்தை நிறுத்த கனடா பல்கலை., ஆய்வு – இனி தெறித்து ஓட வேண்டியது தான்!

பலரும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த கடும் முயற்சி எடுப்பார்கள். ஆனால், சிகரெட் பழக்கத்தை நிறுத்திய ஓரிரு நாட்களிலேயே மீண்டும் புகை பிடிக்க துவங்கி விடுவார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களா? அப்படியென்றால் இதனை படிக்க வேண்டியவர்கள் நீங்கள் தான்.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஓட்டப்பயிற்சி மூலம் புகை பழக்கத்தை நிறுத்த முடியும் என தெரியவந்துள்ளது. அதனால், நாடு முழுவதும் ‘நிறுத்துவதற்காக ஓடுங்கள்’ (Run to Quit) எனும் பிரச்சாரத்தை முன்னிறுத்தி, ஓட்டப்பயிற்சிக்கான குழுக்கள் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன. Mental Health and Physical Activity எனும் அராய்ச்சி இதழில் இந்த ஆய்வறிக்கை இடம்பெற்றுள்ளது.

#IceFishing கேள்விப்பட்டு இருக்கீங்களா? – கனடாவில் இருந்துகிட்டு போகலனா எப்படி?

கடந்த 2016-ஆம் ஆண்டு கனடாவில் Run to Quit குழுவில் 168 பேர் இணைந்தனர். அவர்களுக்கு ஓட்டப்பயிற்சிக்கான ஆலோசனைகள் வழங்குதல், நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி (5 கிலோமீட்டர் ஓட்டம்) ஆகியவற்றை இந்த குழுக்கள் வழங்கின. அதில், 72 பேர் கடைசி வாரத்தில் பயிற்சியை நிறுத்திவிட்டனர். இந்நிலையில், அக்குழுவில் மீதம் உள்ளவர்களில் 37 பேர் முழுவதுமாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு கார்பன் – மோனாக்சைடு சோதனை செய்யப்பட்டு இது உறுதிபடுத்தப்பட்டது.

இதில், 10 வாரங்கள் ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டவர்களில் 50.8 சதவீதத்தினர் முழுவதும் புகை பழக்கத்தை நிறுத்திவிட்டதாகவும், 91 சதவீதத்தினர் புகை பழக்கத்தை முன்பிருந்ததை விட குறைத்துள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் மனநலமும் முன்னேற்றம் அடைந்ததாகவும், அவர்கள் உடலில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு மூன்றில் ஒரு பங்கு குறைந்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் படிக்க – கனடா சிருங்கேரி கோவிலில் புத்தாண்டு 2020 கூட்டு பிரார்த்தனை – முழு விவரம் இதோ

”இந்த ஆய்வின் மூலம் உடல் இயக்கத்தின் மூலம் புகை பழக்கத்தை நிறுத்த முடியும் என தெரியவந்துள்ளது. இதற்காக பரவலாக சமூக குழுக்களை உருவாக்கினால் இதனை எளிதில் அனைவரும் செயல்பாட்டு வடிவத்திற்கு கொண்டு வர முடியும். ஏனென்றால் தனி நபர்கள் தனியாக ஓட்டப்பயிற்சியை தினந்தோறும் மேற்கொள்வது கடினம். இந்த பயிற்சியின் மூலம் முழுமையாக புகை பழக்கத்தை நிறுத்தாவிட்டாலும், அதனை குறைத்துக்கொண்டாலும் நல்லதுதானே”, என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் முதன்மையானவருமான கார்லே பிரெய்ப் தெரிவித்தார்.