பத்து மீட்டர் இடைவெளி விட்டு 911-ஐ தொடர்பு கொள்ளுங்கள் – மின் கம்பிகளில் செயலில் இருக்கும் மின்சாரம் உயிரைப் பறிக்கும்

british columbia flooding rainfall credit cbc

கனடாவின் தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிக பனிப்பொழிவுகளால் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக ஏறத்தாழ 14000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மோசமான வானிலை மற்றும் புயல் போன்றவற்றின் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியர்கள் மின்துண்டிப்பினால் பாதிக்கப்பட்டனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள மின்சார செயல் இழப்புகளுக்கு மோசமான வானிலை முக்கிய காரணமாகும். மரங்கள் முறிந்து மின் இணைப்பு கம்பிகள் அல்லது கட்டமைப்புகளை சேதப்படுத்தும் போது இதுபோன்ற மின்சார செயல் இழப்புகள் ஏற்படும் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஹைட்ரோ செய்தி தொடர்பாளர் கூறினார்.

ஃபிரேசர் பள்ளத்தாக்கில் உள்ள சில பகுதிகள், வான்கூவர் தீவு மற்றும் தெற்கு உள்ளூர்களில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் ரீடர் கூறினார். மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான பணிகளில் மின் வாரிய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் மின்சாரம் எப்போது மீட்டெடுக்க படும் என்றும் புயல் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தியது என்றும் கணிப்பது மிகவும் கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் துண்டிப்பு காலங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் பேட்டரிகள், மின்விளக்கு, எமர்ஜென்சி கிட் மற்றும் முதலுதவி பெட்டி போன்றவை இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார். மோசமான வானிலை காரணமாக இதுபோன்ற இடையூறுகளை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ரீடர் தெரிவித்தார்.

மின் இணைப்பு கம்பிகள் சாலைகளில் கீழே விழுந்து இருப்பதை கண்டால் பத்து மீட்டர் இடைவெளி விட்டு உடனடியாக 911 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார். ஏனெனில் மின்கம்பிகளில் தீப்பொறி மற்றும் புகை போன்றவை ஏற்படாமல் இருந்தாலும் மின் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை மறக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.