கனடா -அமெரிக்கா எல்லை : எரிவாயு வாங்க எல்லையைத் தாண்டிய பெண்ணிற்கு அபராதம்

america canada border
canada

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பலத்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் கனடியர்கள் அத்தியாவசிய தேவைக்காக உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயு போன்றவற்றை வாங்குவதற்காக எல்லை தாண்டி அமெரிக்காவிற்கு சென்று வருகின்றனர்.

கனடாவிலிருந்து எல்லையை தாண்டி அமெரிக்கா செல்வதற்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனடிய அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

விதிவிலக்கு தகவல்களை அறிந்திருந்த கனடிய பெண்மணி ,எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்காக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள Blaine என்ற பகுதிக்குச் சென்று மீண்டும் தனது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளார்.

கனடாவிற்கு திரும்பும்பொழுது கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண்மணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் பெண்மணியை சோதனை செய்தபோது அவரிடம் PCR பரிசோதனை முடிவுகள் இல்லாததால் சட்டத்தை மீறியதாக கூறி கடிந்து கொண்டனர். அந்த சட்டத்தில் விதிவிலக்கு இருப்பதாக அதிகாரியிடம் பெண்மணி எடுத்துக்கூறியும் அதிகாரி அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திற்கு மீண்டும் சென்று PCR பரிசோதனையை செய்து 72 மணி நேரம் காத்திருந்து முடிவுகளை பெற்று வருமாறும் அல்லது விதிமீறல் செய்ததற்காக 5700$ அபராதம் செலுத்துமாறும் பெண்மணியிடம் அதிகாரி கட்டளையிட்டுள்ளார்.

 

அதிர்ச்சி அடைந்த பெண்மணியின் கண்கள் கலங்கின. வெள்ளத்தால் சாலைகளும் ரயில் பாதைகளும் சேதமடைந்தது தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் அமெரிக்காவிற்கு எல்லைதாண்டி செல்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று பில் பிளேயர் அறிவித்திருந்தார். எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பில் பிளேயரின் அறிவிப்பு குறித்து தெரிந்திருக்கவில்லை என்பது பெண்மணியை சிக்கலான நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

திடீரென அபராதம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெண்மணி, அபராத தொகையை திரும்ப பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.