அமெரிக்கா – கனடா எல்லைக்கு அருகில் குழந்தையின் சடலம் மீட்பு – பனிப்புயலில் உறைந்து 4 பேர் உயிரிழப்பு

canada us border manitoba

கனடா – அமெரிக்கா நில எல்லையில் ஏற்பட்ட பனிப்புயலில் உறைந்து 4 பேர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் பயன்படுத்தும் வழித்தடமான அமெரிக்கா -கனடா எல்லையில் குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டதாக கனடிய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

கடும் பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் காற்றின் வேகத்தை கணக்கில் கொண்டு பனி குவியல்களில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு எடுக்கும்போது வெப்பநிலையானது -35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடுமையான குளிர் காலநிலையின் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையின் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க எல்லையில் இருந்து 12 கிமீ தொலைவிலும் கனடாவின் மணிதொபா மாகாணத்தில் உள்ள எமர்சன் நகரத்திலிருந்து 10கிமீ தொலைவிலும் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. முதலில் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பதின்ம வயதுடைய நபரின் சடலம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் கனடிய எல்லைக்கு அருகில் முறையான ஆவணமற்ற இந்திய நபர்களுடன் வேன் ஓட்டிச் சென்றது கண்டறியப்பட்டது. வியாழக்கிழமையன்று சடலங்கள் மீட்டெடுக்கப்பட்ட அதே பாதையில் ஒருவரை மனித கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்ததாக அமெரிக்க நீதித்துறை கூறியது.

Covid-19 தொற்றுநோய் காரணமாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் எல்லையை கடக்கும் பயணத்தின் முயற்சிகள் கடந்த ஒரு வருடமாக குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.