பூங்காவில் முகாம்களை அகற்றும் காவல்துறையினர் – ஆதரவு தெரிவிக்கும் ஜான் டோரி

வெளியேற்ற நடவடிக்கை :

இன்று காலை டொரன்டோ நகரிலுள்ள அலெக்ஸாண்ட்ரா பூங்காவில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டோரன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டவுண்டவுன் பூங்காவில் அமைத்திருந்த முகாம்களை நகர பணியாளர்கள் இன்று அகற்றம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இன்று காலை டொரண்டோவில் உள்ள டண்டாஸ் மற்றும் பாதர்ஸ்ட் தெருக்களுக்கு அருகில் அமைந்துள்ள பூங்காவில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விதிமீறல் அமல் படுத்தியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவில் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முகாம்கள் மூலம் இருப்பிடம் இன்றி தவிக்கும் நபர்களுக்கு உணவு, உடல் மற்றும் மனநல தீர்வுகள் போன்ற உதவிகள் வழங்கப்படுகிறது.

ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு உடைமைகளை எடுத்து செல்ல இரண்டு பைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கூடாரங்கள் மற்றும் சிறிய கட்டமைப்புகள் போன்றவை அகற்றப்படாமல் தளத்தில் உள்ளன.

பூங்காவில் மூவர் கைது :

பொது இடத்தில் மது போதையில் இருந்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றொருவர் பூங்காவில் அத்துமீறியதற்காக கைது செய்யப்பட்டதாகவும் டொரன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நபர் கைதுசெய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.

டொரன்டோ காவல்துறையினர் “முகாம்களில் வசிப்பவர்கள், நகர பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ” கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் இன்று இந்த பூங்கா மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜான் டோரி நகரத்தின் அமலாக்க நடவடிக்கைகளை ஆதரித்துள்ளார். செய்தியாளர்களிடம் “வெளியேற்றங்கள் பெரும்பாலும் அமைதியானவை ” என்று கூறினார்.