கனடாவின் ஆல்பர்ட்டாவில் கடும் குளிர் – உறை பனியினால் ஏற்படும் அபாயம்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் குளிர்கால எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. குளிர்ச்சியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் பல்வேறு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு கட்டாயப்படுத்துகிறது.

அல்பேட்டா மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே குளிர்கால எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டன.கிறிஸ்துமஸ் தினத்தில் குளிர்கால எச்சரிக்கையின் கீழ் கொண்டுவர படாத தெற்கு ஆல்பர்ட்டாவின் சில பகுதிகளும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கேரியில் காற்றின் குளிர் -43 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. மேலும் எட்மன்டனில் -40C மற்றும் -55C வெப்பநிலைக்கு இடையில் குளிர்ச்சியான காற்று எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்தது.

கொடூரமான குளிர், கடுமையான குளிர் போன்று இந்தக் குளிர்கால நிலையை விவரிக்க வேறு வழி இல்லை என்று சுற்றுச்சூழல் கனடாவின் அதிகாரி டேவ் பிலிப்ஸ் கூறினார். ஆல்பர்ட்டா மாகாணத்தை அலாஸ்கா, யூகோன் மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலிருந்து குளிர்ந்த காற்று சூழ்ந்து வருவதாக அவர் கூறினார்.

ஆல்பர்ட்டா மாகாணத்தின் மூலைமுடுக்குகளில் அனைத்தும் பனிப்பொழிவு தடிமனாக குவிந்து கிடக்கிறது. அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது வேறு நிவாரணமும் இல்லை என்று கூறினார். ஆல்பர்ட்டா மக்கள் இத்தகைய குளிர்ச்சியான காலநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கடும் குளிர் காரணமாக திங்கட்கிழமை ராபிட் ஹில் மூடப்பட உள்ளது.