கனடாவில் அதிகளவில் விமானங்கள் ரத்து – மோசமான வானிலையே காரணம் என்று தெரிவித்த விமான நிறுவனங்கள்

air canada
air canada

கனடாவில் கடும் குளிர் மற்றும் பனி பொழிவு காரணமாக விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்ற மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்வது அதிகரித்துள்ளது. விமான ரத்து அறிவிப்பால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

covid-19 மற்றும் கவலைக்குரிய மாறுபாடான ஓமிக்ரோன் தொற்று போன்றவற்றை விட வானிலையே விமான ரத்துகளுக்கு பெரிய காரணியாக அமைவதாக விமான நிறுவனங்கள் கூறுகின்றன.

டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை கனடாவில் உள்ள மிகப்பெரிய விமான நிறுவனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன.மோசமான வானிலை காரணமாக ஏர் கனடா நிறுவனம் திட்டமிடப்பட்ட தனது விமானங்களில் 4 சதவீதத்தை ரத்து செய்துள்ளது.

வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் அதன் திட்டமிடப்பட்ட விமானங்களில் 7 சதவீத விமானங்களையும்,ஃ பிளேர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட விமானங்களில் 9 சதவீதத்தையும் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட விமானங்களின் விகிதம் சென்ற மாதத்தை விட டிசம்பரில் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Covid-19 தொற்று நோய்க்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் விடுமுறை காலத்தில் தற்போதைய ரத்து எண்ணிக்கைகளை விட அதிகமாக இருந்ததாகவும் தரவுகள் கூறுகின்றன.

ஓமிக்ரோன் மற்றும் covid-19 வைரஸ் தொற்று உடன் தொடர்புடைய பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக சில விமானங்களை ரத்து செய்ததாக அமெரிக்க விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Covid-19 வைரஸ் தொற்றை விட மோசமான வானிலையால் கனடாவில் பெருமளவு விமானங்களை ரத்து செய்துள்ளதாக விமான நிறுவனங்கள் கூறுகின்றன.