கனமழை தொடரும் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெள்ளம் மற்றும் புயல் எச்சரிக்கை

beach
ctv

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீயை அடுத்து கனமழை பெய்து வருகிறது .தொடர் கனமழை காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்படுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்காக கனேடிய ஆயுதப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வார இறுதியில் கனமழை, வெள்ளம் மற்றும் புயல் போன்றவற்றை எதிர்கொள்வதற்கு மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் மூத்த அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

திங்கட்கிழமை மழை தெற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பலத்த வளிமண்டல காற்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு கடற்கரையை தாக்க உள்ளதாக பொது பாதுகாப்பு துறை அமைச்சர் மைக் கூறினார்.

இன்னும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. மேலும் வடக்கு கடற்கரைக்கு தனித்த வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய வானிலை நிலவரத்தின்படி 20 முதல் 40 மில்லி மீட்டர் மழையை எதிர்பார்க்கலாம் என்று செய்தி மாநாட்டின்போது மைக் கூறினார். நெடுஞ்சாலை 99 அத்தியாவசிய பயணங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் விவசாயம் மற்றும் வினியோக சங்கிலி சீர்குலைந்தது. இதுவரை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 என்று அறிவிக்கப்பட்டுள்ளன .மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்