கனடாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன

rainfall toronto environment canada
crerdit- cp24 rain

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் பாதிப்படைந்தவர்களை தேடும் முயற்சியில் மீட்புக் குழு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கனமழையால் இடுப்புவரை வெள்ளநீர் பாய்வதால் மீட்புக் குழுவினருக்கு பாதிக்கப்பட்டவர்களை தேடுவது மிகவும் கடினமாக உள்ளது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள கணக்கில் வராத மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். வாகன ஓட்டிகள் சரிவில் புதைந்து இருக்கலாமென்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை அதிகாரிகளிடம் இருவர் காணாமல் போனதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சாலையில் சிக்கியுள்ள வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அகற்றப்பட்டாலும் மீட்புக்குழுவினர் சரிவில் உள்ள குப்பை பகுதிகளில் தீவிரமாகதேடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு கிட்டத்தட்ட 300 பேர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கனமழையால் மாகாணம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் அடையும் துயரத்தை நினைத்து மிகவும் கவலைப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.